12,959 கோயில்களில் - ஒருகால பூஜை நடத்த வைப்பு நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்வு : ரூ.129 கோடி காசோலை வழங்கிய முதல்வர்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 12,959 கோயில்களில் ஒருகால பூஜை நடத்த வைப்பு நிதி தலா ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.129 கோடியே 59 லட்சம் வைப்பு நிதியில் செலுத்த முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள போதிய வருமானம் இல்லாத கோயில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற பெரிய கோயில்களின் உபரி நிதியில் இருந்து நிதி உதவி செய்யும் விதமாக ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிதியின்கீழ் ரூ.5 கோடி வைப்பு நிதி ஒருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையில் இருந்து கோயில்களுக்கு ஒருகால பூஜை நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்கிட வழிவகை செய்யப்பட்டது. ஒருகால பூஜை நடைபெறும் 12,959 கோயில்களுக்கு வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.

வைப்பு நிதி உயர்வு

இந்தச் சூழலில், போதிய வருமானம் இல்லாத 12,959 கோயில்களில் ஒருகால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக வைப்பு நிதியினை ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்காக, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மொத்தம் ரூ.129 கோடியே 59 லட்சம் காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்ய தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல்ய மிஸ்ராவிடம் வழங்கினார்.

நிறைவான நிலை

இதன்மூலம், கோயில்களுக்கு கூடுதலாக வட்டித்தொகை கிடைக்கப்பெறுவதால் பூஜை பொருட்களை தேவையான அளவு வாங்கி பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படும் என்று அறநிலையத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத் துறைச் செயலாளர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்