புதிய வகை கரோனா வைரஸ் பரவல் - விமானநிலையங்களில் கட்டுப்பாடுகள் அமல் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேற்று 12-வது கரோனா மெகா தடுப்பூசிசிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை அடையாரில் உள்ள மல்லிப்பூ காலனி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘ஒரு சிலநாடுகளில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தென் ஆப்ரிக்கா, சீனா,கோசுவானா, ஹாங்காங், பிரேசில்,இத்தாலி போன்ற வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவிலிருந்து வரும் அனைவரும் வீட்டு தனிமையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மதுரை ஆகிய சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் விமான நிலையங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் தனித்தனியே தனிஅலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மருத்துவர்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர கண்காணிப்பு அவசியம்

சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பூசிகள் ஒமைக்ரான் தொற்றிலிருந்து ஓரளவு தற்காக்க உதவும் என நம்பப்படுகிறது. மருத்துவமனைகளில் சேர்ந்துதீவிர சிகிச்சைக்குள்ளாவதிலிருந் தும், இறப்பு நேரிடுவதை தவிர்க்கவும் தடுப்பூசிகள் உதவக் கூடும்.எனவே, அனைவருக்கும் தடுப்பூசிபோடுவதை உறுதிபடுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்தும், ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு வருவோரை தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்துதல் அவசியம்.

பொது சுகாதாரத் துறைஅதனை உறுதிபடுத்த வேண்டும்.ஒமைக்ரான் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதனை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்