நாமக்கல்லில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் : பெண்கள் உட்பட 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சாவை நாமக்கல் காவல் துறையினர் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீஸார் திருச்செங்கோடு சாலை எர்ணாபுரம் பிரிவில் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த திருச்செங்கோடு குமரமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (41), நல்லூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த விஜயவீரன் (30), மணியனூரைச் சேர்ந்த ராணி (32) ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்படி ஈரோட்டைச் சேர்ந்த கஞ்சா விற்பனையாளர்கள் ஆனந்தி (39), ராஜூ (61) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 340 கிலோ கஞ்சா மற்றும் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் கூறியதாவது: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாதரி எனும் மலையில் கஞ்சா விளைவிக்கப்பட்டு அங்கிருந்து தமிழகம், கேரளாவுக்கு கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரூ.5 லட்சம் கொடுத்து கஞ்சா கொண்டுவரும்படி தெரிவிக்கப்பட்டது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கொண்டுவரும்போது பிடிக்கப்பட்டது.

கஞ்சா கடத்தலில் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவர் தேடப்பட்டு வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட 340 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியாகும். விசாகப்பட்டினத்தில் உள்ள கஞ்சா மொத்த விற்பனையாளரும் தேடப்பட்டு வருகிறார். இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்