பாலியல் குற்றங்களில் இருந்துகுழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டத்தை தீவிரமாக்குவதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பாலியல் குற்றங்களில் இருந்துகுழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர்வழங்கிய அறிவுறுத்தல்கள்:
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஏதுவாக தமிழக அரசு தனியான இழப்பீட்டு நிதிஉருவாக்கி, இதுவரை 148 குழந்தைகளுக்கு முதல்கட்டமாக ரூ.2 கோடி வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இழப்பீடுகளை துரிதமாக வழங்க வேண்டும். தடயவியல் ஆய்வு அறிக்கைகள் விரைவாக கிடைக்க ஏதுவாக, ஆய்வகங்கள், இதர உட்கட்டமைப்புகளை கூடுதலாக அமைக்க வேண்டும்.
24 மணிநேரமும் செயல்படும் கல்வி தகவல் மையம் (14417), உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையமாகசெயல்படுகிறது. ‘1098’ சிறுவர்உதவி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும்.
இந்த வழக்குகளில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுடன், விரைவாக வழக்குகளை முடித்து பாலியல் குற்றம்புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், தொடர் கண்காணிப்பு, சட்ட உதவி ஆகியவை முற்றிலும் குழந்தைகள் நேய சூழலில் வழங்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago