நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் நேற்று பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டதால் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பின்னலாடைகளுக்கு பயன்படுத்தப்படும் நூல் விலை கடந்த 1-ம் தேதி உயர்த்தப்பட்டது. நூல்விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதையடுத்து, நூல் விலை உயர்வைக் கண்டித்து ஒருநாள் கடைஅடைப்பு, உண்ணாவிரதத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த சைமா, டீமா, நிட்மா, டெக்மா, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், பல்வேறு தொழிற்சங்கங்கள் என 117 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
திருப்பூரில் நேற்று நடந்த போராட்டத்தையொட்டி பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகேஉண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, உற்பத்தியாளர் சங்கத்தினர்(டீமா) போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். இதில் ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உட்பட பின்னலாடை தொழில்துறையினர், தொழிற் சங்கத்தினர், அரசியல் கட்சியினர்என ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பின்னலாடை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 80 சதவீதம் அடைக்கப்பட்டன. இதனால் ஒரே நாளில் ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் என ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: நூல் விலை உயர்வால்,பின்னலாடை உற்பத்தியைச் சார்ந்துள்ள 13 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்தியஅரசு தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் 50 சதவீதம் நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை, இந்திய பருத்திக் கழகத்திடம் தமிழக அரசு வாங்குகிறது. நூற்பாலைகளுக்கு இந்திய பருத்திக்கழகம் நேரடியாக கொடுக்காமல், இடைத்தரகர்களுக்கு அதிக அளவில் கொடுப்பதால் பஞ்சுபதுக்கப்படுகிறது. பருத்தி கொள்முதல் கழகம் மற்றும் பின்னலாடை வாரியம் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்தனர். அதில், ‘பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நூல் விலை உயர்வால் பின்னலாடைத் தொழிலைப்போல, விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். உள்நாட்டு தேவையை கணக்கில்கொண்டு நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago