மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ளாததே - சென்னையில் மழைநீர் தேங்க முக்கிய காரணம் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகார்

By செய்திப்பிரிவு

நடப்பு ஆண்டு தற்போதைய அரசு மழைநீர் வடிகால்களைதூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதுவும் சென்னையில் மழைநீர் தேங்க முக்கிய காரணம் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு, அதிமுக அரசுமீதும், முன்னாள் அமைச்சர்களான எங்கள் மீதும் முதல்வர் குற்றம் சாட்டுகிறார். முன்பு,சென்னையில் 3,200 இடங்களில் மழைநீர் தேங்கியது. நாங்கள் மேற்கொண்ட சீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 67 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்குகிறது.

சென்னை தியாகராய நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் மேற்கொண்ட இடங்களில் கடந்த முறை அதிகமான மழைவந்தபோதும் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், தற்போது முறையாக தூர்வாராததால் மழைநீர் தேங்குகிறது. அதிமுகஆட்சியில், ஒவ்வொருஆண்டும் ஆகஸ்ட் மாதம் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணியைத் தொடங்குவோம். நடப்பு ஆண்டில் தற்போதைய அரசு மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும்பணியை முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதுவும் சென்னையில் மழைநீர் தேங்க முக்கிய காரணமாகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்,சென்னை நகரில் மேம்படுத்துவதற்கான இடங்களை ஐஏஎஸ்அதிகாரிகள்தான் தேர்வு செய்துள்ளனர். இச்சூழலில் எதற்கெடுத்தாலும் முந்தைய அரசு மீதும், என் மீதும் முதல்வர் குறை கூறுகிறார். கடந்த அதிமுக ஆட்சி நிலைத்து நிற்கவும், கோவையில் 10 தொகுதிகளை அதிமுக வெல்வதற்கும் நான் முக்கிய காரணம் என்பதால், என் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு முதல்வர் செயல்படுகிறார். என் மீது வழக்கு போட்டனர். வீடுகளில் சோதனை நடத்தினர். வழக்குகளை நான் சட்டப்படி எதிர்கொள்ள தயார்.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், என் மீது ஏதாவதுஒரு வழக்கை பதிவு செய்துகைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக முதல்வர் கோவையைபுறக்கணிக்கக்கூடாது. மாநகரில் நிறுத்தி வைக்கப்பட்ட 300சாலை திட்டப்பணிகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடாவிட்டால், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்