கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அந்த மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் எந்த தவறும் செய்யவில்லை என குறிப்பிட்டு உருக்கமான கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், வெண்ணெய்மலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 19-ம் தேதி பள்ளிக்கு சென்று வந்த பிறகு, வீட்டில் அந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகவும், பெயரை தெரிவிக்க பயமாக இருப்பதாகவும், பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி மாணவி தானாக இருக்கவேண்டும் எனவும் எழுதியிருந்தார்.
இதுதொடர்பாக வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக, அந்த மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர்கள் போராட்டம்
இதனிடையே, மாணவியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி, மாணவர் அமைப்புகள் பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், அந்த மாணவி படித்து வந்த தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த, கரூர் வடக்கு காமராஜபுரத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் சரவணன்(42) நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த நிலையில், தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், அவர், வாங்கலில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் செல்லாமல், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த துறையூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
‘நன்றாக படியுங்கள்'
அப்போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில், ‘‘என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன்பு அவமானமாக இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் மாணவர்களை திட்டி இருக்கிறேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். நன்றாக படியுங்கள்’’ என எழுதியுள்ளார்.பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி கடந்த 19-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், 5 நாட்கள் கழித்து அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago