மாவட்ட ஆட்சியரை கண்டித்து - கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போராட்டம் :

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தரைத்தளத்தில் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு 3 முறை கடிதம் அனுப்பியும், அவர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், அவரும் கீழே அமர்ந்து ஜோதிமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாநில அரசு மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், அவரது பதிலில் திருப்தி அடையாத ஜோதிமணி தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ‘அலிம்கோ’ நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்து வழங்குகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

‘அலிம்கோ’ தயாரிப்புகள் தரமற்றவை எனக் கூறுகிறார். அவற்றை பயன்படுத்தாமலே எப்படி அவ்வாறு கூறுகிறார் எனத் தெரியவில்லை. இதன் மூலம் ஏதும் பயன் இருக்காது என்பதால் ஊழல் கறைப் படிந்த ஆட்சியர் மத்திய அரசு திட்டத்தை புறக்கணிக்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் நடத்துவதற்கான உறுதிக் கடிதம் வழங்கும் வரை எனது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE