நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் இன்று முழு அடைப்பு : ஏற்றுமதியாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு

By செய்திப்பிரிவு

நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் இன்று முழு அடைப்பு நடத்தப்படும் என அனைத்து தொழில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

வரலாறு காணாத நூல் விலைஏற்றத்தில் இருந்து திருப்பூரைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இன்று (நவ.26) ஒரு நாள் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தலைமையில் நடந்த அனைத்து தொழில் அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.

சைமா, டெக்மா, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், பல்வேறு கட்சியினர் மற்றும் தொழிற்சங்கம் ஆதரவளிப்பதால், இன்று பனியன் நிறுவனங்கள் செயல்படாது. அதேபோல், தொழில்துறையினர். நூல் விலை உயர்வுப் பிரச்சினையில் திருப்பூர் தொழிலைக் காப்பாற்றுவதற்கு, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்றைய போராட்டம் இருக்கும் என்று தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (நவ.26) காலை தொடங்குகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (நவ.26) பொது வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை கடைபிடிக்க அனைத்து வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டு முடிவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முழு மனதுடன் ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைத் துறையின் நலனுக்கு தேவையானதைச் செய்யவும், உறுப்பினர்கள் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். மேலும் நூல் பிரச்சினையை தீர்க்க தேவையான அனைத்து முயற்சிகளையும் சங்கம் தொடர்ந்து எடுக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஆதரவைத் தொடர்ந்து, இன்றைக்கு ஏற்றுமதி நிறுவனங்களும் இயங்காத சூழல் திருப்பூரில் ஏற்படும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் தலையீட்டால், சீனாவில் உற்பத்தியாகும் பருத்தி, நூல் மற்றும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள நூல் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது.

ஜவுளித்தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்த்து, பல பகுதிகளில் விசைத்தறி, பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித்தொழில் சார்ந்தஉற்பத்தியாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும், வருமான இழப்பும் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஜவுளித்தொழிலில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நடைபெறும் இன்றைய போராட்டத்துக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு ஆதரவளிக்கும் என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்