தம்பதி உட்பட 5 பேர் உயிரிழப்பு : 13 பேர் காயம், 4 வீடுகள் தரைமட்டம்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

By செய்திப்பிரிவு

சேலத்தில் வீட்டில் நடத்திய பலகாரக்கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் தம்பதி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். 4 வீடுகள் தரைமட்டமாயின.

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்க விட்டல் தெருவில் நெருக்கமான வீடுகள் கொண்ட பகுதியில் கோபி என்பவர் தனது வீட்டில் பலகாரம் செய்து விற்பனை செய்துவருகிறார். இவரது வீட்டில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

இதில், கோபியின் வீட்டின் அருகே உள்ள வெங்கட்ராஜன், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலராக பணிபுரியும் பத்மநாதன் உள்ளிட்டோர் வசித்த தரைதளம் மற்றும் மேல்தளம் உள்ளிட்ட 4 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும், அருகே இருந்த சில வீடுகளின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு சென்றதீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் உள்ளிட்டோர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சேலம் ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உள்ளிட்டோர் அங்கு சென்று மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.

இதில், இடிபாடுகளில் சிக்கிய நாகசுதா (30), அவரது கணவர் மோகன்ராஜ் (40), கோபி (52), அவரது தாய் ராஜலட்சுமி (80), கணேசன் (37), அவரது மகன் சுதர்சன் (10), கோபால் (70), வெங்கட்ராஜன் (62), அவரது மனைவி இந்திரா (54), முருகன்(46), அவரது மகள் பூஜா (10), முருகனின் மனைவி உஷாராணி (40), தனலட்சுமி (65) ஆகிய 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்களை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது வழியில் ராஜலட்சுமி உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் மதியம் 2 மணியளவில், இடிபாடுகளில் சிக்கிய பத்மநாதன் (49), அவரது மனைவி தேவி (39), முருகன் என்பவரின் மகன் கார்த்திக் ராம் (18), கோபி என்பவரின் உறவினர் எல்லம்மாள் (90) ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

வீடுகளில் வர்த்தக சிலிண்டர்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலத்தில் கோபி என்பவர் வீட்டில் பலகாரக்கடை நடத்தி உள்ளார். அதில் வர்த்தக சிலிண்டரைப் பயன்படுத்தியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் யாரும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை வரவழைக்க சேலம் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் வர்த்தக சிலிண்டர் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்த விபத்தில் இறந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்த சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்