மேட்டூர் அணைக்கு நீர்வரத்துவிநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அதே அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த13-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் அதே அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
வரத்துக்கு ஏற்ப வெளியேற்றம்
நேற்று நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, அணை மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 48 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 200 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர்இருப்பு 93.63 டிஎம்சி-யாகவும் உள்ளது.
சுரங்க மின்நிலையத்தில் பழுது
இதற்கிடையில், அணை மின்நிலையம் வழியாக நீர் வெளியேற்றப்படுவதால்,சுரங்க மின்நிலைய 4 அலகுகள் மூலம் கடந்த 11-ம் தேதி முதல் தினசரி மொத்தம் சுமார் 250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், சுரங்க மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகில் பழுது ஏற்பட்டு, நேற்று முன்தினம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், பழுதான அலகு வழியாக நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு, பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 57 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து இருந்தது. இது, மாலையில் விநாடிக்கு 67 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.இந்நிலையில், நேற்று காலையில் விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
மேலும், மழை நீர் வரத்து காரணமாக காவிரியாற்றில் கலங்கிய நிலையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அருவிகள் உட்பட ஒகேனக்கல்லின் அனைத்து பகுதிகளிலும் காவிரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago