தமிழகத்தில் முதல்முறையாக கரூரில் - கருத்தடை செய்யும் ஆண்களுக்கு ‘தங்கத் தந்தை’ விருது : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழகத்திலேயே முதல்முறையாக, கரூர் மாவட்டத்தில் கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகையுடன் ‘தங்கத் தந்தை’ விருது அல்லது இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற ஏதேனும் ஒருஅரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு அரசு சார்பில் ரூ.1,100 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக, கரூர் மாவட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.5,000 ஊக்கத் தொகையுடன் தங்கத் தந்தை விருது வழங்கும் திட்ட தொடக்க விழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் திட்டத்தை தொடங்கி வைத்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆண்களுக்கு தங்கத் தந்தை விருது வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசியது: ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 ஊக்கத் தொகையுடன் தங்கத் தந்தை விருது வழங்கப்படும். அல்லது இலவச வீட்டு மனைப்பட்டா, வீட்டில் உள்ள முதியவர் ஒருவருக்கு மாதாந்திர உதவித் தொகை, விலையில்லா கறவை மாடு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்கரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடனுதவி, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து தருதல், தோட்டக்கலைத் துறைமூலமாக தென்னையில் பல அடுக்கு பயிர் திட்டத்தின் மூலம்ஒரு ஹெக்டேருக்கு ரூ.40,000 வரைமானியம் வழங்குதல் போன்ற ஏதேனும் ஒரு அரசுத் திட்டத்தில் முன்னுரிமை அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.

முதல்நாளில் 21 பேர்

நேற்று நடந்த முகாமில் 21க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். அவர்களுக்கு ஊக்கத் தொகையுடன், தங்கத் தந்தை விருது வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE