நேரடி பருவத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் 3-வது நாளாக போராட்டம் நடத்த முயன்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வால் சமீபத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பருவத் தேர்வுகள் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகங்களும் தேர்வு நடத்த ஏற்பாடுகளைச் செய்தன.
இந்நிலையில், அரசு, தனியார் கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்கள் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மதுரை நகரில் உள்ள 17 கல்லூரிகள், மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியே கூடும்போது தடுத்து எச்சரிக்கப்பட்டனர். மேலும் தமுக்கம், கோரிப்பாளையம், ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, சின்ன சொக்கிகுளம் பகுதியில் போராட்டத்துக்கு ஆயத்தமான 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைதுசெய்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மறியலின்போது ரகளையில் ஈடுபட்டதாக பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 800 பேர் மீது வழக்கு பதிவானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago