திமுக ஆட்சியில் 40 முதல் 45 அணைகள் கட்டப்பட்டன - இரு மாநில எல்லைகளில் அணை கட்ட திட்டம் : மேட்டூர் அணையை ஆய்வு செய்த அமைச்சர் தகவல்

தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது 40 முதல் 45 புதிய அணைகள் கட்டப்பட்டன. இப்போது இரு மாநில எல்லைகளில் ஒருசில அணைகள் கட்டத் திட்டமிட்டிருக்கிறோம் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணை மற்றும் அணை உபரிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையம் உள்ளிட்டவற்றை நேற்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டக் கூடாது என்பதுதான் திமுக மற்றும் அதிமுக-வின் நிலைப்பாடு, தமிழகத்தின் நிலைப்பாடு இதுதான். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பல சொல்லப்படாத விவரங்கள் உள்ளன. திமுக ஆட்சிக்கு வரும்போதுதான் விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றன.

மேகேதாட்டு அணையை தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கட்ட முடியாது. எனவேதான் கர்நாடக அரசு கொடுத்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது 40 முதல் 45 புதிய அணைகள் கட்டப்பட்டன. இப்போது இரு மாநில எல்லைகளில் ஒருசில அணைகள் கட்டத் திட்டமிட்டிருக்கிறோம். கோதாவரி உபரிநீரை, காவிரிக்கு கொண்டு வரும் திட்டம் பேச்சுவார்த்தை அளவில்தான் உள்ளது.

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் ஏரி, குளங்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. சில ஏரிகளில் கரைகள் வெட்டப்பட்டு மண் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த ஏரிகள் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நின்று கொண்டுள்ளன. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மேட்டூர் அணை நிரம்பிஉள்ளது. அதனால், அதன் உபரிநீர்திட்டம் தொடர்பான சிந்தனை இப்போது இல்லை என்றார்.

கூடுதல் தலைமைச் செயலர்(நீர்வளத் துறை) சந்தீப் சக்சேனா,சேலம் ஆட்சியர் கார்மேகம், பொதுப்பணித் துறை தலைமைபொறியாளர் ராமமூர்த்தி உடன்இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்