டெல்டா மாவட்டங்களில் வெள்ளம்: 17 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு : கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் 68-வது கூட்டுறவு வார தொடக்க விழா மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் இ.பெ.செந்தில்குமார், எஸ்.காந்திராஜன், கூட்டுறவுப் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் தலைமையில் அனைவரும் கூட்டுறவு வார விழா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: முதல்வர் உத்தரவின்பேரில் எனது தலைமையில் அமைச்சர்கள் குழு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தோம்.

இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் நாளை (இன்று) வழங்க உள்ளோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நபர் 600 கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து எடுத்த நடவடிக்கையின்பேரில் தற்போது ரூ.5.30 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை

ராமநாதபுரம் கிள்ளியூரில் உள்ள கூட்டுறவு வங்கி கிளையில் கவரிங் நகைகளை அடமானமாக வைத்து ரூ.1.5 கோடி மோசடிசெய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்