காரில் இருந்தபடியே வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி, பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, வயலாமூர், பூவாலை, குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த விளைநிலங்களை நேற்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.

பூவாலை கிராமத்துக்கு காரில் வந்த அவர் அங்கிருந்து டிராக்டரில் ஏறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள வயல் பகுதிக்கு சென்றார். பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் சிறிது தூரம் டிராக்டரை அண்ணாமலையே ஓட்டிச் சென்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பரவனாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி விட்டன. என்எல்சி நிறுவனத்திடம் பேசி சிஎஸ்ஆர் நிதி மூலம் கீழ்பரவனாற்றை தூர்வாரி அகலப்படுத்துவதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொள்ளும். இந்த கிராமத்தில் அனைத்து விவசாயிகளும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.19 ஆயிரத்து 600 கிடைக்கும். இந்த பகுதி விவசாயிகள் அதிக அளவில் பயிர் கடன் வாங்கி இருக்கிறார்கள். அதை ரத்து செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நான் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் காரில் இருந்தபடியே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு செல்கி றார். அப்படி பார்வையிட்டால் உண்மை நிலவரம் தெரியாது. அவர் அடுத்தமுறை வரும்போது கண்டிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடி பார்வையிட வேண்டும். அவர் செய்வார் என நம்புகிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்