இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் - கொலை வழக்கில் ரவுடி உட்பட 5 பேர் கைது :

By செய்திப்பிரிவு

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கொலை வழக்கில் 5 பேரை போலீஸார் நேற்று கைது ெசய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்த நடேச.தமிழார்வன்(50) நேற்று முன்தினம் நீடாமங்கலத்தில் 8பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைஅடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி தமிழார்வனின் ஆதரவாளர்கள், அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், கடைகளை அடித்து நொறுக்கி, சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நீடித்தது. இதனால், நீடாமங்கலத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பூவனூரைச் சேர்ந்த ராஜ்குமார்(33) என்பவர் உட்பட 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக, நீடாமங்கலத்தில் எஸ்.பி விஜயகுமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் தமிழார்வனை கொலை செய்தவர்கள் தப்பிச் செல்லும்போது, ஒரு இருசக்கர வாகனத்தை நிகழ்விடத்திலேயே விட்டுச் சென்றுவிட்டனர். அதைக்கொண்டு விசாரணை நடத்தியதில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்தது தெரியவந்தது.

பூவனூரைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும், அவரது உறவினர் கலைமணி என்பவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்புதகராறு ஏற்பட்டது. இதில் கலைமணிக்கு ஆதரவாக தமிழார்வன் செயல்பட்டுள்ளார். தொடர்ந்து, கலைமணி கொடுத்த புகாரின்பேரில் ராஜ்குமார், அவரது தம்பி ராமமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கெனவே தனது வளர்ச்சிக்கு பலவிதத்திலும் தமிழார்வன் தடையாக இருப்பதாக கருதிவந்த ராஜ்குமார், தற்போது உறவினர்களுக்குள் நிகழ்ந்த சண்டையை போலீஸ் வழக்குப் பதியும் அளவுக்கு கொண்டுசென்றதும் தமிழார்வன்தான் எனக் கருதினார். இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பில் பதுங்கியிருந்த ராஜ்குமார், அவரது கூட்டாளிகள் பாடகச்சேரி மாதவன்(23), பூவனூர் அக்ரஹாரம் மனோஜ்(23), அறையூர் தென்பாதி சேனாதிபதி(25). அறையூர் எழிலரசன்(22) ஆகிய 5 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், சிலரை தேடி வருகிறோம். ராஜ்குமார் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில், நீடாமங்கலம் காவல் நிலையத்தின் ரவுடி பட்டியலிலும் இருக்கிறார்.

இதற்கிடையே, நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். வடுவூர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

கொலைச் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை ஐ.ஜிபாலகிருஷ்ணன், டிஐஜி பர்வேஷ்குமார், எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் பாராட்டினர்.

தமிழார்வனின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, நேற்று அவரது ஊரான ஒளிமதி கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்