திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள து.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி இரவு துர்க்கையம்மன் உற்சவமும், 8-ம் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், நேற்று முன்தினம் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற்றன.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து 7.25 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, அரோகரா முழக்கத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் முக்கிய பிரமுகர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்டோர் மட்டும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, தினசரி காலை மற்றும் இரவில் கோயிலின் 5-ம் பிரகாரத்தில் உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் மற்றும் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற உள்ளது.
19-ம் தேதி மகா தீபம்
10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. அதற்கு முன்பாக மகாதீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஆண் – பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் தர உள்ளார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.கரோனா தொற்றுப் பரவல் அச்சத்தால் கோயில் பிரகாரத்தில் தினசரி நடைபெறும் உற்சவர் உலா மற்றும் மகா தீபத்தை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago