சேலம் அருகே வேளாண் கூட்டுறவு சங்கத்தில் - நகை கடனில் ரூ.4.61 கோடி மோசடி உதவிச் செயலாளர் உட்பட 3 பேர் பணி நீக்கம் :

சேலம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.4.61 கோடி மோசடி செய்தது தொடர்பாக சங்க உதவி செயலாளர் உட்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலுார் குண்டுக்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் பெயரில் நகைகள் இல்லாமல் நகைக்கடன் வழங்குவதாக கடந்த 2017-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சங்க உறுப்பினர்கள் பெயரில் நகைகள் இல்லாமல் மொத்தம் ரூ.4.61 கோடி நகைக்கடன் வழங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சங்கச் செயலாளர் பழனிசாமி, உதவிச் செயலாளர் பெரியசாமி, முதுநிலை எழுத்தர் ரகுமணி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பழனிசாமி, ரகுமணி, சேட்டு ஆகியோருக்குச் சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், துறை ரீதியான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உதவி செயலாளர் உள்ளிட்ட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நகைக்கடன் மோசடி புகார் விசாரணையில் பெரியசாமி, ரகுமணி, சேட்டு ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது துறை ரீதியான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும், சங்கத் தலைவர் சரஸ்வதி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சங்கச் செயலாளர் பழனிசாமி மீதான புகார்தொடர்பாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தலைமையிலான நிலைத்திறன் குழுவினர் விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்