119 அடியை எட்டியது மேட்டூர் அணை - 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் : காவிரி கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதைஅடுத்து, காவிரி கரையோரப் பகுதியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 27 ஆயிரத்து 600 கனஅடியாகவும், நீர்மட்டம் 117.61 அடியாகவும் உயர்ந்தது.

அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியை நீர்மட்டம் விரைவில் எட்டும் என்பதால், அணை வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு நீர்வளத் துறை (மேட்டூர்) அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை கண்காணித்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில், அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரத்து 440 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதையடுத்து அணையின் சுரங்க மின்நிலையம், அணை மின்நிலையம் வழியாக, விநாடிக்கு 5 ஆயிரம்கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர் வெளியேற்றம் படிப்படியாக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மாலை 4 மணியளவில் நீர் திறப்பு 17,180 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்வரத்து 22,538 கனஅடியாகவும் நீர்மட்டம் 119.09 அடியாகவும், நீர்இருப்பு 91.88 டிஎம்சியாகவும் இருந்தது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து காவிரி கரையோரப் பகுதியில் பொதுப்பணித் துறைமற்றும் வருவாய்த் துறை, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, தேவூர் ஆகிய இடங்களில் காவிரி கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுஉள்ள பாதுகாப்பு பணிகளை சேலம் ஆட்சியர் கார்மேகம் ஆய்வுசெய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் கூறும்போது, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடி குறைவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் 2 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்க முடியும்” என்றார்.

இதனிடையே, சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவருமான சிவ.சண்முகராஜா, ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

மின் உற்பத்தி

உபரிநீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணை மின் நிலையங்கள் மூலம் 250 மெகாவாட்டும் சேலம் தொடங்கி ஈரோடு மாவட்டம் வரையிலான 7 கதவணைகளில் மொத்தம் 210 மெகாவாட்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்