மதுக்கடை பார் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் : காவிரி டெல்டா பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் பார்களை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமாகா திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியது:

கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம். எனவே, அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அரசியல் சாயம் தேவை இல்லை.

1956, நவ.1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. முந்தைய அரசு அந்த நாளை தமிழ்நாடு தினமாக அறிவித்தது. திமுக அரசு ஜூலை 18-ம் தேதியை அறிவித்துள்ளது. இதேபோல, தமிழ்ப் புத்தாண்டு நாள் விவகாரத்திலும் தை, சித்திரை என கருத்து வேறுபாடு உள்ளது. இந்த விவகாரங்களில் அனைத்துத் தரப்பினரிடத்திலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது அரசின் கடமை.

கரோனா முடியாத நிலையில், டெங்கு, மலேரியா காய்ச்சலும் பரவி வருகின்றன. இந்தச் சூழலில் டாஸ்மாக் பார்களை திறப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. எனவே, டாஸ்மாக் பார்களை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.31,000 கோடியில் 90 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் விவசாயப் பகுதிக்கு உகந்தது அல்ல. எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அளித்த ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நமது உரிமைகளை தமிழக அரசு விட்டுக் கொடுக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்