8.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி - பட்டாசு வெடிப்பதை தடுக்க கூடாது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

By செய்திப்பிரிவு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியது:

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், குழந்தைகள் செல்ல வசதியாக அரசு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். 1956 நவம்பர் 1-ம் தேதி தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதை பின்பற்றி நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு உதயமான நாளாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெட்ரோல் விலை

தமிழக அரசின் வீடுதேடி கல்வி என்பது வரவேற்கத்தக்க விஷயம். கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு பெட்ரோல் மூலம் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் தான் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படுத்த முடியும்.

இந்தியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளாக தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை தற்போது ஏன் தடுக்க வேண்டும். பண்டிகைகள் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை பறை சாற்றுகின்றன. எனவே, மக்கள் தைரியமாக பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும். இதை எட்டரை லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் குண்டர் சட்டம் போடுகிறார்கள். ஆனால், பெண் நிர்வாகிகள் பற்றி பதிவுபோட்ட திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்