தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவியதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பாலியல் புகார்குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார், முன்னாள் டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய முன்னாள்எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜுலை 29-ம் தேதி 400பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து ஆக.9-ல் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தன் மீதான வழக்கை விழுப்புரத்தில் விசாரிக்கதடை விதிக்கக் கோரி, முன்னாள்சிறப்பு டிஜிபி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்றுஇவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. முன்னாள் எஸ்பிநேரில் ஆஜரானார். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகாததற்கு தலைமை குற்றவியல் நடுவர் கோபிநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட உள்ளதால், தங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நிராகரித்த நடுவர் கோபிநாதன், “வழக்கு விசாரணையை 90 நாட்களில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கினால் மீதமுள்ள 75 நாட்களில் நான் எப்படி வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு, அன்றைய தினம் முன்னாள் சிறப்பு டிஜிபி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்; ஆஜராக தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் குற்றவியல் நடுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago