கனகராஜின் உறவினர் ரமேஷுக்கு 5 நாள் போலீஸ் காவல் : கோடநாடு வழக்கு நவம்பர் 26-க்கு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், கனகராஜின் உறவினர் ரமேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வாளையாறு மனோஜ் குன்னூர் சிறையில் உள்ளார். மற்றவர்கள் ஜாமீன் பெற்றுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், கோடநாடு சதி திட்டம் குறித்து தெரிந்திருந்த நிலையில், போலீஸ் விசாரணையின்போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உட்பட்ட 4 பிரிவுகளின்கீழ் நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் வழக்கு பதிந்து, கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த 25-ம் தேதி கைது செய்தனர். தனபாலை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.

மேலும், ரமேஷையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி சஞ்சய் பாபா அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டதையடுத்து, ரமேஷை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் ஆஜராகியிருந்தனர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன் பேரில், வழக்கு விசாரணையை நவ. 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார். மேலும், தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனு நவ.2-ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்