கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசுக் கடையில் நடந்தபயங்கர தீ விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இனிப்பு கடையில் இருந்த 5 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் இந்த விபத்து நடந்துள்ளது.
சங்கராபுரம் பேரூராட்சியில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்தமுக்கிய சாலையில் செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான மளிகைகடையில், பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அருகே இனிப்புக்கடை மற்றும் துணிக்கடை ஒன்றும் இயங்கி வருகிறது.
இந்த பட்டாசுக் கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பட்டாசுகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அப்போது அருகில் இந்த பட்டாசுக் கடையுடன் ஒட்டியிருந்த இனிப்புக் கடைக்கும் தீ பரவியது. அதில் வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு தீப்பிழம்பு பரவியது.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீது பட்டாசு வெடித்து சிதறியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காலித் (23), ஷா ஆலம்(24) ஷேக் பஷீர் (72) என்று தெரியவந்தது. மேலும் 2 பேரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்ததும் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிய கடைகள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி யவர்களை மீட்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
பட்டாசுகள் வெடித்து சிதறியதால் கடை அமைந்திருக்கும் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் தர், எஸ்.பி. ஜியாஹூல் ஹக் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பட்டாசு கடைக்குள் 5-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago