கரூரில் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் - மாவட்ட, ஒன்றியக் கவுன்சிலர்கள் உட்பட அதிமுக நிர்வாகிகள் 4 பேர் கைது :

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால், தேர்தல் அலுவலரின் காரை மறித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அக்.22-ம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அன்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 12 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலரும், தேர்தல் அலுவலருமான மந்திராசலம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாகக் கூறி, அலுவலகத்தில் இருந்து வெளியேறி காரில் புறப்பட்டார்.

அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தேர்தல் அலுவலர் மந்திராசலத்தின் காரை மறித்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்டஊராட்சி தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 57 பேரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்து, அன்றைய தினம் இரவு விடுவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மந்திராசலம் புகார் அளித்தார். அதன்பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது கொலைமிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ்.திருவிகா, அவரது மகனும்,கரூர் ஒன்றியக் குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வன், கரூர்மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளரும், கரூர் மேற்கு ஒன்றியச்செயலாளருமான கமலக்கண்ணன், தாந்தோணிமலை சுந்தர்ராஜ் ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE