கட்டுமானப் பொருள் விலையை குறைக்க இபிஎஸ் வலியுறுத்தல் : சிமென்ட் விலை குறையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிமென்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து, மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது சிமென்ட் ரூ.470, ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.5,000, ஜல்லி ரூ.3,800, ஒரு டன் கம்பி ரூ.78 ஆயிரம், ஒரு லோடு செங்கல் ரூ.29 ஆயிரம், கிராவல்மணல் ரூ.2,000-க்கு மேல் உயர்ந்துள்ளது.

ஒரு சதுர அடி வீடு கட்ட ரூ.2,200-ஆகஇருந்த செலவு தற்போது ரூ.3,100-ஆகஉயர்ந்துள்ளது. சிமென்ட் விலை டெல்லியில் ரூ.350, ஆந்திராவில் ரூ.370, தெலங்கானாவில் ரூ.360, கர்நாடகாவில் ரூ.380 விற்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.470. மற்ற கட்டுமானப் பொருட்களின் விலையும் வேறு மாநிலங்களில் 30 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.

கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்

இதற்கு, பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனியார் சிமென்ட் விலை கடந்த மார்ச்மாதம் ரூ.420 முதல் ரூ.450 வரை இருந்தது.இது படிப்படியாக உயர்ந்து ஜூன் மாதம்ரூ.470 முதல் ரூ.490 வரை விற்கப்பட்டது.விலையை குறைக்க சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர் கேட்டுக் கொண்டதால் சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.20 முதல்ரூ.40 வரை குறைந்தது. இந்நிலையில், நிலக்கரித் தட்டுப்பாடு, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றால் அக்.6 முதல்சிமென்ட் விலை ரூ.490 வரை விற்கப்பட்டது. அரசு தொடர்ந்து வலியுறுத்தியதால் மீண்டும் ரூ.440 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தைக் குறைக்க தொடர்ந்து அரசு முயற்சித்து வருகிறது.

டான்செம் சிமென்ட் விற்பனை கடந்த ஆண்டைவிட இரு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. தற்போது சிமென்ட் ரூ.350 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது.

ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் ‘வலிமை’ என்ற புதிய பெயரில் சிமென்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இது மாதம் 30 ஆயிரம் டன் அளவில் வெளிச்சந்தையில் விற்கப்படும். இதனால் சிமென்ட் விலை மேலும் குறையும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்