இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவரின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் ராஜ்கிரண்(30), சுகந்தன்(30), சேவியர்(32) ஆகியோர் ஒரு படகில் அக்.19-ல் கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் படகு மீது மோதியதில் படகு கவிழ்ந்தது. இதையடுத்து, கடலில் விழுந்து தத்தளித்த சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு சிறையில் அடைத்தனர். 2 நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.
இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயலைக் கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, நேற்று அதிகாலை 5 மணிக்கு சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை முன்னிலையில் கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் ராஜ்கிரணின் உடலை இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.
கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்துக்கு கொண்டு வரப்பட்ட ராஜ்கிரணின் உடலை பார்த்து மனைவி பிருந்தா(25), தாய் ஆரவள்ளி, தந்தை ராசு உள்ளிட்ட குடும்பத்தினர் கதறினர். பின்னர், ராஜ்கிரணின் உடலுக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி அஞ்சலி செலுத்தியதுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகை ரூ.10 லட்சத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினார். பின்னர் உடல்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago