மின்சார வாரியம் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, வழக்கு தொடர்ந்தால் சந்தித்து கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக இளைஞரணிசார்பில் கோவையில் இருந்துகேரளாவுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பது மற்றும் திருப்பூரில் மாவட்ட கட்சி அலுவலக ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாஜக தேசியச் செயலாளர் அருண்சிங், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இதற்குஅந்தத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதே முக்கிய காரணம்.தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் தொடங்கிபல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறையில் ஊழல், வேலை வாங்கித் தருவதாக ஊழல்,மணல் விவகாரத்தில் ஊழல் செய்து, தற்போது மின்சார வாரியத்திலும் ஊழல் செய்கிறார். நிச்சயமாக அவரை பதில் சொல்ல வைப்போம்.

தமிழக முதல்வரும் செந்தில் பாலாஜி விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார். மேலும், தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் விடுதி சமையலரை தனது வீட்டில் சமையல் செய்ய வைக்கிறார். இது எந்த வகையில் சரியானது?’’ என்றார்.

முன்னதாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசும்போது, ‘‘மின்துறை குறித்து தெரிவித்த புகார் கருத்துகளுக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியதுபோல் மன்னிப்பு எல்லாம் என்னால் கேட்க முடியாது. என் மீது எந்த வழக்குதொடர்ந்தாலும் அந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறேன்” என்றார்.

பாஜக கேரள மாநிலப் பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மாநில இளைஞரணித் தலைவர் வினோத் பி.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்