மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஓயாது உழைப்போம் : தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீர் கடிதம்

அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக, தனது பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அதிமுக ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற திமுகவின் திட்டம், எம்ஜிஆர் இருந்தவரை செல்லுபடியாகவில்லை.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், கட்சி பிளவுபட்டதன் காரணமாக திமுக ஆட்சி அமைந்தாலும், தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்து ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர், 1991-ல் அவர் தமிழகத்தின் முதல்வரானார். அவரது ஆட்சியில் தொட்டில் குழந்தைகள் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு, மகளிருக்கு தனிக் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், சவால்களை எதிர்கொண்டு, 2001-ல் மீண்டும் அதிமுகஆட்சியைப் பிடித்தது. அப்போது,பயிர்க் கடனுக்கான வட்டி தள்ளுபடி, அன்னதானத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதுடன், சுனாமி, பெரு வெள்ளத்தையும் ஜெயலலிதா சிறப்பாக எதிர்கொண்டார்.

பின்னர் மெகா கூட்டணி மூலம், திமுக தலைமையில் மைனாரிட்டி ஆட்சி அமைந்தது. அப்போது சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட அதிமுக, 2011, 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தப்பட்டது.

2021 பொதுத் தேர்தலில் எதிரணியினரின் மெகா கூட்டணி, சாத்தியமற்ற வாக்குறுதிகளால் ஆட்சி நம்மை விட்டுக் கைநழுவிப் போனது. வாரிசின் புகழ்பாடும் மன்றமாக சட்டப்பேரவை மாறிவிட்டது. ஒரு குடும்பத்தின் பிடியில் திமுக சிக்கித் தவிக்கிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மரண அடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். எனவேஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஓயாது உழைப்போம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்