உதகையில் பிடிபட்ட டி.23 புலிக்கு திடீர் உடல்நலக் குறைவு : மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தொடர்ந்து தாக்கி கொன்ற டி.23 புலியை 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்று முன்தினம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். புலி உடலில் காயங்கள் இருந்ததால், மருத்துவக் குழு அறிவுறுத்தல் படி புலியை மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறும்போது, ‘‘வனத்தில் 22 நாட்களாக டி23 புலியை வனத்துறையினர் பின் தொடர்ந்து தேடுதல் நடத்தியதால், புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பிற புலிகளுடன் சண்டையிட்டதால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் புலியை வெகு தூரம் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் மைசூரு கொண்டு செல்லப்பட்டது. மைசூருவில் புலிக்கு நல்ல சிகிச்சை கொடுக்க முடியும் என்பதால் புலி சீக்கிரம் குணமடையும். சிகிச்சை முடிந்த பின்பு 10 நாட்கள் கழித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

இந்நிலையில், தற்போது டி.23புலி மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் உள்ளது. அதற்கு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வனத்துறையினர் கூறும்போது, ‘மயக்கத்தில் இருந்த புலிக்கு இன்று காலை மயக்கம் தெளிந்தது. இதன் பின்னர் புலி மிகவும் ஆக்ரோ‌ஷமாக காணப்பட்டது.

இந்நிலையில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டி23 புலிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 18 நாட்களாக உணவு உண்ணாமல் இருந்துள்ளதாலும், உடலில் காயங்கள் இருப்பதாலும் மிகவும் சோர்வுடனேயே காணப்படுவதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையில் புலிக்கு உடலில் 9 காயங்கள் உள்ளது கண்டறியப்பட்டது. அதில் 4 காயங்கள் பிற புலிகளுடன் ஏற்பட்ட சண்டையால் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த காயங்களால் புலியின் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. தமிழக வனத்துறை உயரதிகாரிகள் புலியின் சிகிச்சையை கண்காணிக்க மைசூரு சென்றுள்ளனர்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்