மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நடப்பு ஆண்டு வாடகை கட்டிடத்தில் செயல்படவும், 50 மாணவர்களை சேர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அவர் நேற்று பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இத்துடன் 150 படுக்கைகளுடன் கூடிய தொற்று நோய் பிரிவையும் சேர்த்து கட்டுவதற்கு ரூ.1,977.08 கோடி கடன் வழங்க ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டு 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நடத்த தயார் என்றும், அதற்கான வாடகையையும் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளையும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை இணை இயக்குநர்கள் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வரும் 20-ம் தேதி சென்னைக்கு வர உள்ளனர். அவர்களிடம் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிகக் கட்டிடம், கட்டுமானப் பணியை விரைவில் தொடங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை நிலைய அதிகாரி காந்திமதி நாதன் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை ஆய்வு செய்வதற்காக அவர் சென்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago