தூத்துக்குடியில் 35 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். அந்த ரவுடி அரிவாளால் வெட்டியதில் காவல் உதவிஆய்வாளர் உள்ளிட்ட 2 போலீஸார் காயமடைந்தனர்.
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன்(42). பிரபல ரவுடியான இவரை போலீஸார் தேடி வந்தனர். கடந்த வாரம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு, திருநெல்வேலி அருகே காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டார். இந்த வழக்கில் துரைமுருகன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
துரைமுருகனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரின்செல்போன் பயன்பாட்டை கண்காணித்ததில் நேற்று மதியம் அவர் தூத்துக்குடி அருகேஉள்ள முள்ளக்காட்டில் இருந்து கோவளம் கடற்கரைக்கு செல்லும் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் தலைமைக் காவலர் பென்சிங் தலைமையிலான இரு தனிப்படையினர், அப்பகுதியில் தேடுதல்வேட்டை நடத்தினர். முள்ளக்காடு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட காற்றாலை இருந்த இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில், துரைமுருகன் தனது கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்தஆரோக்கியராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா ஆகியோருடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீஸார் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.
துரைமுருகன் உள்ளிட்ட 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். துரைமுருகன் அரிவாளால் போலீஸாரை வெட்டியுள்ளார். இதில்,உதவி ஆய்வாளர் ராஜபிரபு, போலீஸ்காரர் டேவிட் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அந்தநேரத்தில் ரவுடிகளான ஆரோக்கியராஜ், ராஜா ஆகியோர் தப்பிச் சென்றுவிட்டனர்.
ராஜபிரபு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தார். துரைமுருகன் அவரை மீண்டும் வெட்ட முற்பட்டதால், உதவி ஆய்வாளர் ராஜபிரபு துப்பாக்கியால் துரைமுருகனை சுட்டார். சம்பவ இடத்திலேயே துரைமுருகன் இறந்தார். தூத்துக்குடிஎஸ்பி எஸ்.ஜெயக்குமார், ஏடிஎஸ்பி கார்த்திகேயன், ஏஎஸ்பி சந்தீஷ், டிஎஸ்பி கணேஷ், ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். காயமடைந்த போலீஸார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன் மீது தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 7 கொலை வழக்குகள் உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
கடந்த 2015 முதல் அவர் மீது குற்றப்பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 3-ம் தேதிதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்ததும் பாவூர்சத்திரம் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago