காவிரி நீரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக,ஆற்றில் பல்வேறு இடங்களில்நீர் மாதிரிகள் சேகரித்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி போன்ற ஆறுகளில் மாசு கலக்காமல் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காவிரி நீரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக, மேட்டூரில் இருந்து மயிலாடுதுறை வரை காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.
இன்னும் 3 ஆண்டுகளுக்குள் சாயக் கழிவுகள், உலோகக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவை காவிரி நீரில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பட்டாசுகளால் மாசு ஏற்படுவதை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையின்போது நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும் கட்டுப்பாடுகளுடன் பட்டாசுகளை வெடிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடங்குளம் அணுக்கழிவு பிரச்சினையில் 7 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முடிந்தும், அதற்கான தீர்வு இன்னும் ஏற்படவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நல்ல தீர்வு காண்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago