தேசிய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மறைவு :

By எஸ். முஹம்மது ராஃபி

தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம்(75) பாம்பனில் நேற்று காலமானார்.

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனைச் சேர்ந்தவர் அருளானந்தம்(75). இவர் தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவராகவும், இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

இலங்கையில் 1980-களில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது அந்நாட்டுக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அப்போது முதல் மீனவர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கினார். கடந்த 40 ஆண்டுகளாக மீனவர்களின் வாழ்வுரிமைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களது விசைப் படகுகள் சிறைபிடிக்கப்படும்போது தமிழக அரசு சார்பாக இலங்கையில் வழக்காடி மீட்கும் பணிகளை திறம்படச் செய்தவர். இந்திய-இலங்கை அரசுகளின் சார்பாக சென்னை, டெல்லி, கொழும்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது மீனவர்களின் பிரதிநிதியாகவும் பங்காற்றி உள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் இலங்கை மீனவர்களின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு அந்த மீனவர்களின் விடுதலைக்கும் பாடுபட்டுள்ளார்.

ராமேசுவரம் மீனவர்களால் தீவுக்கவி என்று அன்போடு அழைக்கப்படும் அருளானந்தம் சிறந்த கவிஞரும் கூட. இவரது இயக்கத்தில் `உப்புக் காற்றும் உசுரும்' எனும் இசைக் குறுந்தகடு 2017-ம் ஆண்டு தங்கச்சிமடத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாம்பனில் உள்ள அவரது இல்லத்தில் அருளானந்தம் நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்குப் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், மீனவர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் அடக்கம் இன்று காலை 10 மணி அளவில் பாம்பனில் நடைபெறும்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் ‘தீவுக்கவி’ அருளானந்தம் அவர்களின் திடீர் மறைவை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவர், அரை நூற்றாண்டாக இந்திய - இலங்கை மீனவர்களின் வாழ்வுரிமைப் போராளியாகக் களத்தில் முன்னின்ற சிறந்த செயற்பாட்டாளரும் கவிஞரும் ஆவார். ‘இந்திய - இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டணி’யின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, வாழ்வாதாரத்துக்கு உயிரைப் பணயம் வைத்துக் கடலில் இறங்கும் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும்போதும் தாக்குதலுக்குள்ளாகும்போதும் அவர்களுக்குப் பக்கபலமாகவும் சட்டத்துணையாகவும் இருந்தவர். அரசுகளுடனான பேச்சுவார்த்தைகளில் மீனவர்களின் பிரதிநிதியாகப் பங்கேற்று அவர்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் உயிருக்காகவும் முக்கியப் பங்காற்றியவர்.

மீனவர்களுக்கு, குறிப்பாக தினக்கூலி அடிப்படையில் மீன்பிடிக்கச் செல்வோருக்கும் - மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களின் விடுதலைக்கும் போராடியுள்ளார் என்பது அவரது மனிதநேயத்தின் அகன்ற சிந்தனைக்குச் சான்றாக அமைகிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வைகோ இரங்கல்

மதிமுக பொதுச் செயாலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ராமேசுவரம் மீனவர்களின் பாதுகாவலர் அருளானந்தம் மறைவு செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். 1980-களின் தொடக்கத்தில் இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை எதிர்த்துக் களம் புகுந்தவர். ராமேசுவரம் தீவு மீனவர் சங்கத்தை தொடங்கியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களின் பாதுகாப்பான நல்வாழ்வு ஒன்றையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு உழைத்தவர். தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவராக இருந்த அவரது மறைவு மீனவ சமுதாயத்துக்கு பேரிழப்பு” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்