அரசியலில் வாழ்க்கையை அழித்துக் கொண்டேன் - மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து

By செய்திப்பிரிவு

“எனது வாழ்க்கையையே அரசியலில் ஓரளவு அழித்துக்கொண்டேன். இது என்னோடு போகட்டும், எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் 2-ம்கட்டமாக நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குருவிகுளம் ஒன்றியம், கலிங்கப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி ஆகியோர் நேற்று வாக்களித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: எங்கள் ஊரில் அமைதியாக தேர்தல் நடக்கிறது. எங்கள் கிராமமே ஒற்றுமையாக இருக்கிறது. எந்தக் காலத்திலும் இல்லாத ஒற்றுமையை எனது மகன் துரை வையாபுரி ஏற்படுத்தி வைத்துள்ளார்.

எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. நான்,56 ஆண்டு காலமாக அரசியலில் கஷ்டப்பட்டுள்ளேன். 28 ஆண்டுகாலம் லட்சக்கணக்கான கி.மீ தூரம் காரில் பயணம், ஆயிரக்கணக்கான கி.மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடத்தியுள்ளேன். ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளேன்.

எனது வாழ்க்கையையே அரசியலில் ஓரளவு அழித்துக்கொண்டேன். இது என்னோடு போகட்டும், எனது மகனும் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரும் 20-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரியும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்