தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்திச் சென்றபெண்ணை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன்(24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(22). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அவருக்கு கடந்த 5-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில், ஒரு பெண் கடந்த 3 நாட்களாக ராஜலட்சுமிக்கு உதவுவதுபோல நடித்து, அங்கேயே இருந்துள்ளார். அவர், நேற்று காலை குழந்தையை தான் கவனித்துக்கொள்வதாகக் கூறி, ராஜலட்சுமியை குளிக்க அனுப்பியுள்ளார்.
ராஜலட்சுமி குளித்துவிட்டு வந்து பார்த்தபோது, அங்கு தனதுகுழந்தையும், அந்தப் பெண்ணும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனை முழுவதும் அவர் தேடிப் பார்த்தபோதும், குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கண்காணிப்பு கேமராவில்..
இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் நகர டிஎஸ்பி கபிலன் மற்றும் மேற்கு போலீஸார் மருத்துவமனைக்கு சென்று, விசாரணைநடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ராஜலட்சுமிக்கு உதவியாக இருந்த பெண் கட்டைப் பையை தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகிஇருந்தது.அந்தப் பையில் குழந்தையை வைத்து, அவர் கடத்திச் சென்றுஇருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையிலான தனிப்படை போலீஸார் குழந்தையையும், கடத்திய பெண்ணையும் தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago