நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு முறையை கைவிட வேண்டும் : டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

By கல்யாணசுந்தரம்

நெல் கொள்முதலுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது அறுவடையாகும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பதிவு செய்யும் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்து, நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தப் புதிய முறையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்ய வேண்டிய நிலம் மற்றும் சாகுபடி விவரங்களை அதற்கென அளிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதனை ஸ்மார்ட் போன், இ-சேவை மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக மேற்கொள்ளலாம். இந்த விவரங்கள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அனுமதி அளித்தவுடன், அந்த விவசாயியின் செல்போன் எண்ணுக்கு, எப்போது நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும் என குறுந்தகவல் வரும், அப்போது எடுத்துச் சென்று விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பதிவு முறைக்கு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மகசூல் இழப்பு ஏற்படும்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

பெரும்பாலானோர் குத்தகை விவசாயிகள். பலருக்கு நிலத்தின் பட்டா எண்கூட முழுமையாக தெரியாது. இந்த முறை நடைமுறை சாத்தியமற்றது. உதாரணமாக, அக்.10-ம் தேதி அறுவடை செய்ய வேண்டிய பயிருக்கு, அக்.25-ம் தேதி கொண்டுவர ஆன்லைன் பதிவில் அனுமதி கிடைத்தால், அதுவரை பயிர்களை அறுவடை செய்யாமல் வைத்திருக்க முடியுமா?

இதனால், நெல்மணிகள் வயலில் கொட்டியோ அல்லது மழையாலோ மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முன்கூட்டியே அறுவடை செய்தால், அந்த நெல்லை மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள விவசாயிகளிடம் வசதிகளும் இல்லை.

எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பழைய முறைப்படி விரைந்து கொள்முதல் செய்வதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்கும். தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைன் பதிவு முறையை கைவிட வேண்டும் என்றார்.

பெட்டிச் செய்தி....

சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தரப்பில் கூறியதாவது: இது நல்ல முறைதான் என்றாலும், சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

உதாரணமாக, தந்தை பெயரில் ஒரே சர்வே எண்ணில் உள்ள நிலத்தில், அவரது 3 மகன்கள் தனித்தனியே சாகுபடி செய்யும்போது, ஆன்லைன் பதிவில் அந்த சர்வே எண்ணுக்குரிய நிலம் முழுவதுக்கும் ஒரே நேரத்தில்தான் விற்பனை செய்ய அனுமதி கிடைக்கும். இதனால், அறுவடை செய்வதில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

மேலும், ஆன்லைன் பதிவில் சர்வே எண் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் சிறு தவறு செய்தாலும் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட விவசாயியின் பெயர், சர்வே எண், சாகுபடி பரப்பு ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர்கள் திருத்துவதற்கான வசதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறான வசதிகளை செய்தால் இந்தப் பதிவு முறையை எளிதாக கையாள முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்