திருப்பாச்சேத்தி அரிவாள் வாங்குவதற்கும் இனி ஆதார் கட்டாயம் : இரும்புப் பட்டறைகளுக்கு போலீஸ் கட்டுப்பாடு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, திருப்புவனத்தில் வாடிக்கையாளர்களிடம் ஆதார் கார்டு நகல்பெறாமல் அரிவாள்களை விற்கக்கூடாது என இரும்புப் பட்டறைஉரிமையாளர்களுக்கு போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

அரிவாள் செய்வதற்கு புகழ்பெற்ற பகுதியாக திருப்பாச்சேத்தி, திருப்புவனம் விளங்குகிறது. இப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. பரம்பரை பரம்பரையாக இங்கு அரிவாள், மண்வெட்டி, கலப்பை, கடப்பாரை போன்றவை தயாரிக்கப்படுகின்றன. கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தும் பல அடி நீளமுள்ள அரிவாள்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ரவுடியிசத்தை ஒழிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும்113 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட அரிவாள்கள், வாள்கள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் அரிவாள்கள் தயாரிக்கும் பட்டறை உரிமையாளர்களிடம் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். ஆதார் கார்டு நகலை கொடுப்போருக்கு மட்டுமே அரிவாள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்புவனம் பட்டறை உரிமையாளர்கள் சிலர்கூறும்போது, “பலர் விவசாயத்தை கைவிட்டதால் அரிவாள், மண்வெட்டி, கலப்பை போன்றவற்றின் தேவை குறைந்துவிட்டது. இதனால் வியாபாரமே குறைவாகத்தான் நடக்கிறது. நாங்கள் இத்தொழிலை குடிசைத் தொழிலாகத்தான் செய்து வருகிறோம்.

இந்நிலையில் சிசிடிவி கேமரா பொருத்த சொல்கின்றனர். எங்களுக்கு அந்த அளவுக்கு வசதி இல்லை. மேலும் வெளியூர்களில் இருந்து வருவோர்தான் அரிவாள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். அவர்களிடம் ஆதார் கார்டு நகலை கேட்டால் தர மறுக்கின்றனர்” என்று கூறினர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “குற்றச் சம்பவங்களை தடுக்கவே கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. சிசிடிவி கேமராக்களை பொருத்துவதாலும், ஆதார் கார்டு நகலை பெறுவதாலும் ஆயுதங்களை வாங்குவோரை கண்காணிக்க முடியும்” என்று கூறினர்.

திருப்புவனம், திருப்பாச் சேத்தி பகுதிகளில் அரிவாள் தயாரிக்கும் பட்டறைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்