17 மருத்துவ சிகிச்சைகளை உள்ளடக்கிய கலைஞரின் - வரும்முன் காப்போம் திட்டம் தொடக்கம் : பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

வாழப்பாடியில் நேற்று கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இணைக்கவும், ஓராண்டில் 1,250 முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் திட்ட’ தொடக்கவிழா சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசும்போது, "முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தில் இருதயம், மகப்பேறு, எலும்பு சிகிச்சை, பல், கண் என 17 மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கி, கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். இதன்படி கிராமம் தொடங்கி, நகரம் வரை ஓராண்டில், 1,250 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் முகாம்கள் மூலம்மக்களுக்கு நோய்களை கண்டறிந்து மருந்து, மாத்திரை வழங்கப்படும். சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். வரும்முன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துடன் இணைக்கப்படும்" என்றார்.

விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் கார்மேகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்றுமதியில் முதலிடம் இலக்கு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியாருக்கு சொந்தமான நவீன சோகோ ஆலையில் மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "ஏற்றுமதியில் 3-வது மாநிலமாக உள்ள தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவதுதான் அரசின் இலக்கு. அதற்கு ஏற்ப ஏற்றுமதிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜவ்வரிசி தொழிலில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ள சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்" என்றார்.

பின்னர் மாலையில், சேலம் கருப்பூர் சிட்கோ-வில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக, சேலம் மகளிர் தொழில்நுட்ப பூங்காவில் தயாரிக்கப்பட்ட துணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆயுத்த ஆடை மற்றும் வடிவமைப்பு குறித்து கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்