செப்.30-க்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை செப்.30-ம் தேதிக்குள் 5 கோடியை எட்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி மெகா முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் 3-வது மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்போது நடைபெறுகிறது. இதில், மாநிலம் முழுவதும் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை விஞ்சிவிடுவோம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசு தடுப்பூசியை அதிகளவில் வழங்க முன்வந்தபோதும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், அப்போது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய திமுக அரசு அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், மக்கள் திருவிழாவில் பங்கேற்பதுபோல தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, வாரந்தோறும் மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளன. மத்திய அரசிடமிருந்து அதிகளவு தடுப்பூசிகள் வரப்பெற்றால், அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

தமிழகத்தில் இதுவரை 500-க்கும் அதிகமான ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 21 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வர் தொடங்கிவைத்த மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் 11.04 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

நீட் தேர்வில் பங்கேற்ற 1.10 லட்சம் மாணவர்களை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு, மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலம் கவுன்சலிங் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர், 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு

முன்னதாக, திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மை. அதனால்தான், தமிழகத்துக்கு வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

மேலும், 3 நாட்களுக்கு முன்பு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலம் மத்திய சுகாதாரதுறை அமைச்சரிடம் நேரிலும் வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில், வரப்பெற்ற 28 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்