கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - வாளையாறு மனோஜுக்கு மீண்டும் நிபந்தனையை தளர்த்தி ஜாமீன் :

By செய்திப்பிரிவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2-வது நபரான வாளையாறு மனோஜுக்கு மீண்டும் நிபந்தனையைத் தளர்த்தி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2-வது நபரான வாளையாறு மனோஜுக்குக் கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், அவருக்கு உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வரவில்லை. இதனால், நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, அவரது வழக்கறிஞர் முனிரத்னம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, நீலகிரி மற்றும் கோவையில் இருந்துஜாமீன் உத்தரவாதம் அளிக்க யாரும் இல்லாத நிலை இருப்பதால், கேரளாவில் இருந்து வாளையாறு மனோஜின் உறவினர்கள் ரூ.50 ஆயிரம் சொத்து மதிப்பு ஆவணத்தை உத்தரவாதமாக அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனக் கடந்த 14-ம் தேதி உத்தரவிட்டார்.

இதனால், வாளையாறு மனோஜின் மனைவி மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோர் உத்தரவாதம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மனைவியின் சகோதரி உத்தரவாதம் அளிக்க முடியாது என மறுத்துவிட்டதால், மீண்டும்ஜாமீனில் தளர்வு கோரி வாளையாறு மனோஜின் வழக்கறிஞர் முனிரத்னம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா மீண்டும் ஜாமீனில் தளர்வு அளித்து நேற்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக வழக்கறிஞர் முனிரத்னம் கூறும்போது, ‘மனோஜின் மனைவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் பிணையாளராக இருக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனையைத் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது’ என்றார்.

இந்நிலையில், தனிப்படை போலீஸாரின் விசாரணைக்கு நேற்று ஆஜராக வேண்டும் என, கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஜித்தின் ஜாய், தீபுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. கரோனா காரணமாக விசாரணைக்கு வரவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து உயிர் இழந்த கணினி இயக்குநர் தினேஷ் தற்கொலை தொடர்பாக எஸ்டேட் ஊழியர்கள் இருவரிடம் கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்