முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கின் தொடர்ச்சியாக - வேலூர் ஆவின் அலுவலகம் உள்ளிட்ட 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை :

By செய்திப்பிரிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கின் தொடர்ச்சியாக வேலூர் ஆவின் அலுவலகம் உள்ளிட்ட 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக 564 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கடந்த 16-ம் தேதி கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள் என 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில், கணக்கில் வராத சுமார் 5 கிலோ தங்க நகைகள், வைர நகைகள், அமெரிக்க டாலர் நோட்டுகள், 551 யூனிட் மணல் மற்றும்சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கே.சி.வீரமணியின் வங்கி கணக்குகள், லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். அவரது வீட்டில்பறிமுதல் செய்யப்பட்ட சொத்துஆவணங்கள், தொழில் முதலீடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசியல் நண்பர்

இந்நிலையில், கே.சி.வீரமணி தொடர்பான ஆவணங்கள் பல, அவரது நெருங்கிய அரசியல் நண்பரும் வேலூர் ஆவின் தலைவரும் வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வேலழகனிடம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆவணங்கள் வேலழகனின் ஆவின் அலுவலகம் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான சம்பத்குமார் வீட்டில் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

அதேபோல், வேலழகனின் நெருங்கிய நண்பரான சாயிநாதபுரம் லட்சுமண முதலி தெருவைச் சேர்ந்த சம்பத்குமார் வீட்டில் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவலர்கள் சோதனை நடத்தினர். சம்பத்குமார் வேலூர் ஆவின் இனிப்பு விற்பனைக்கான முக்கிய ஒப்பந்ததாரராக உள்ளார்.

ஏற்கெனவே, வீரமணி மற்றும் அவரது சகாக்கள் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்றபோது வேலழகன் வீட்டில் சோதனை நடைபெறாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, 2-ம் கட்டமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தகக்கது.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வழக்கு தொடர்பாகவே வேலூரில் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கே.சி.வீரமணியின் தொழில் முதலீடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்