இணையவழி விநாடி-வினா தேர்வில் - நடத்தாத பாடங்களில் இருந்து கேள்வியால் மாணவர் குழப்பம் :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கடந்த செப்.1-ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்ததில் இருந்து 45 நாட்களுக்கு 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு பாடங்களை நினைவுப்படுத்த வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கான பாடத்திட்டமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி, பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் செப்.18 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இணையவழியில் விநாடி-வினா முறையில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி செப்.18-ல் நடந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களில் இருந்து தலா 10 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒன்றரை மணி நேரம் நடந்த இத்தேர்வில் பெரும்பாலான கேள்விகள் நடத்தாத 10-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேட்கப்பட்டன.இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

இதுகுறித்த சிவகங்கை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கல்வித்துறை உத்தரவுப்படி தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு பாடங்களை நினைவுபடுத்தி நடத்தி வருகிறோம். ஆனால், நடத்தாத 10-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகளை கேட்கின்றனர். வருங்காலங்களில் இதுபோன்ற குழப்பம் இல்லாமல் கற்பித்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ள முடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்