நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து வழக்கு - தேர்தல் ஆணையம் பதில் தரஉயர் நீதிமன்றம் உத்தரவு : விசாரணை தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

நத்தம் தொகுதி அதிமுக எம்எல்ஏ விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்துதிமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தைவிட 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ‘நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்துள்ளார். வாக்குப்பதிவுக்கு கடைசி 2 தினங்களுக்கு முன்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்பை மீறி அதிகமாக செலவு செய்துள்ளார்.

எனவே, அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது எனஅறிவிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் 6 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்