கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்த ஐஜியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை போலீஸார் விரைவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குற்றம் சாட்டப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில்இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தங்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தவேண்டும் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி, சதீசன், தீபு ஆகியோர், வழக்கறிஞர்கள் கே.விஜயன், முனிரத்னம், செந்தில் ஆகியோர் மூலம் மேற்கு மண்டல ஐஜியிடம் நேற்று ஆன்லைனில் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் கே.விஜயன், முனிரத்னம், செந்தில் ஆகியோர் கூறும்போது, ‘கேரளாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. எங்கள் கட்சிக்காரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதனால், போலீஸார் விசாரணையை காணொலிக் காட்சி மூலம் நடத்த வேண்டும் என ஐஜியிடம் மனு அளித்துள்ளோம். நேரில் விசாரணை நடத்த முற்பட்டால், வழக்கறிஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago