திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கபணிகளை மேற்கொள்வதற்காக ராஜகோபுரம் முன்பு நேற்று அதிகாலை பந்தக்கால் நடப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவ.7-ம் தேதி இரவு தொடங்குகிறது. இதையடுத்து, பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவுள்ளன.
அதன் பின்னர், அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதிமுன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நவ.10-ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் தொடங்கும். நவ.16-ம் தேதி 7-ம் நாள் உற்சவமான மகா தேரோட்டம் நடைபெறும்.
மேலும், விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் நவ.19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு நேற்று அதிகாலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சம்பந்தவிநாயகர் சன்னதி முன்பு பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, வேத மந்திரங்களை சிவாச்சார்யார்கள் முழங்க, மங்கள இசையுடன் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து, சுவாமி பவனி வரும் வாகனங்கள் மற்றும் திருத்தேர்கள் உள்ளிட்ட அனைத்தும் சீரமைக்கப்படவுள்ளன. பந்தக்கால் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago