நீட் தேர்வை சரியாக எழுதாததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை :

By செய்திப்பிரிவு

அரியலூர் அருகே நீட் தேர்வை சரியாக எழுதாததால் மாணவி நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், புரந்தான் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி(50). இவரது மனைவி ஜெயலட்சுமி(45). இருவரும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ளனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துளாரங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்களது மகள்கள் கயல்விழி(19), கனிமொழி(17). இதில், கயல்விழி பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கனிமொழி, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சென்ற ஆண்டு பிளஸ் 2 முடித்தார். தேர்வில் 562.28 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றிருந்தார். இதனிடையே, கும்பகோணத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றார்.

தஞ்சாவூரில் கடந்த 12-ம் தேதி நீட் தேர்வை எழுதினார். அப்போது, இரு பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றும் தனது பெற்றோரிடம் கடந்த இரு தினங்களாக கனிமொழி கூறிவந்ததுடன் சற்று மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரியலூரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த மனைவியை அழைத்து வர கருணாநிதி நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். பின்னர், இருவரும் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு வந்தபோது, கதவு உள்புறம் தாழிடப்பட்டிருப்பது. கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, கனிமொழி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று கனிமொழியின் உடலை மீட்டு சொந்த ஊரான சாத்தம்பாடிக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே, கனிமொழியின் உடல், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, கனிமொழியின் உடல் சாத்தம்பாடி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, திமுக சார்பில் அமைச்சர் சிவசங்கர், கனிமொழியின் பெற்றோரிடம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்