கோடநாடு எஸ்டேட் காவலாளியை அழைத்து வர நேபாளம் செல்ல போலீஸார் முடிவு :

By செய்திப்பிரிவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாபாவிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸார் நேபாளம் செல்ல முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், மொத்தம் உள்ள 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்து வருகிறது.

கோடநாடு சம்பவத்தின்போது கேரளாவில் இருந்து இரு வாகனங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு வாகனம் வழங்கிய உரிமையாளர் நவ்ஷாத், இடைத்தரகர் நவ்ஃபுல் ஆகிய இருவரிடமும் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.

வாகனத்தை பெற்ற ஜம்சீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் விசாரணைக்கு வர தனிப்படையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணையில் இருந்து இருவரும் விலக்கு கோரி உள்ளனர். ஜம்சீர் அலிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாலும், ஜித்தின் ஜாயின் சகோதரிக்கு திருமணம் நடக்கவுள்ளதாலும், விசாரணையில் இருந்து இருவரும் விலக்கு கோரியுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கின் நேரடி சாட்சியான காவலாளி கிருஷ்ண தாபாவை, கொலை நடந்த அன்று கட்டிப்போட்டு குற்றவாளிகள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணதாபா, திடீரென நேபாளம் தப்பிச் சென்றார்.

நீதிமன்ற உத்தரவுப்படி நேபாளம் சென்ற போலீஸார், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிருஷ்ணதாபாவை அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், அவர் மீண்டும் நேபாளம் சென்றுவிட்டார்.

இந்நிலையில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபாவை மீண்டும் அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் தனிப்படையினர் நேபாளத்துக்கு சென்று, கிருஷ்ணதாபாவை அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்