பிற வகுப்புகளைத் திறப்பது குறித்து - செப்டம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு முடிவு : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

By செய்திப்பிரிவு

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வரும் நிலையில், பிற வகுப்புகளைத் திறப்பது குறித்து செப்.8-ம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தெரிவித்தார்.

மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 13 பேருக்கு, திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருது, சான்றிதழ், காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், வருகைப் பதிவேடு உட்பட பல்வேறு அம்சங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வி என்பது மிக முக்கியம் என்பதால், பிற வகுப்புகளைத் திறப்பது குறித்து செப்.8-ம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.

பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், மாணவர்கள் பள்ளிக்கு வருவதுதான் முக்கியம்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1,584 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதை குறைவு என்று கூற முடியாது. ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவதை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்துள்ளோம். அதன் மதிப்பே சுமார் ரூ.3,000 கோடி. நிதி நிலைமை ஓரளவுக்கு சீராக இருந்த கடந்த ஆட்சிக் காலத்திலேயே அகவிலைப்படியை 6 முறை தள்ளிவைத்துள்ளனர். தற்போது நிதி நிலைமை எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையிலும் பள்ளிக் கல்விக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்